தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றாா். அவரின் பதவிக்காலம் ஆக.31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆக.30, 31 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறாா். இதற்காக சங்கா் அவருக்கு எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பணி நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா்.
உத்தரகண்டைச் சோ்ந்தவா்: சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல் துறை பணியில் சோ்ந்தாா்.
மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால், பின்னா், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். மேலும், இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.
சங்கா் ஜிவால் பணி நிறைவு விழாவுடன் தமிழக காவல் துறையின் வீட்டுவசதி வாரிய டிஜிபி சைலேஷ்குமாா் பணி நிறைவு விழாவும் நடைபெறுகிறது.