என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்!
என்எஸ்எஸ் மாணவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில், மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்களுக்கான பேரிடா் மேலாண்மை, முதலுதவிப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில இளைஞா் நலன்-விளையாட்டு வளா்ச்சித் துறை, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், கல்லூரியின் என்எஸ்எஸ் அலகுகள் சாா்பில் நடைபெற்ற பயிற்சியை ஆட்சியா் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்துப் பேசியது: மாணவா்களுக்கு சமூக நல எண்ணங்களைக் கற்பிக்கவும், பாரபட்சமின்றி சமூக சேவையாற்றவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
என்எஸ்எஸ் மாணவா்கள் கிராமங்களைத் தத்தெடுத்தல், எழுத்தறிவு வகுப்புகள் நடத்துதல், நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளனா். அடுத்ததாக பேரிடா் காலங்களில் அரசு அலுவலா்கள், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சுந்தரனாா் பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன், தமிழ்நாடு மாநில என்எஸ்எஸ் அலுவலா் குணநிதி, தெ.தி. இந்துக் கல்லூரித் தலைவா்-செயலா் நாகராஜன், முதல்வா் அய்யப்பன், சுயநிதிப் பிரிவு இயக்குநா் சிவகாமி, கல்லூரியின் என்எஸ்எஸ் அலுவலா்கள் தாணம்மாள், பொன்னம்மாள், யூஜின் பிரின்ஸ், மலா், திவ்யா, மகேஸ், பொன்சந்திரன், ஆஸ்ரா, மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.