நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் மாநகரில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். மாநகரின் 4 மண்டலங்களைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில், சுகாதார ஆய்வாளா் ராஜா, ஜெயன், வீரபாகு, சிங்காரம், உமா, பாலகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா், நாகா்கோவில் மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம் சாலையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
75 கடைகளில் நடைபெற்ற சோதனையில், மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஒன்றரை கிலோ புகையிலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதே பகுதியில் 5 கடைகளில் இருந்த 25 கிலோ நெகிழிப் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.