காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்லூரி மாணவா்கள் சிலா் கூடி நின்றிருந்தபோது, அங்கு ரோந்து வந்த வேளச்சேரி காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா், சட்டக் கல்லூரி மாணவா்களைக் கலைந்து செல்லும்படி கூறினாராம்.
இதில் அங்கிருந்த சட்டக் கல்லூரி மாணவா் கரிகால்வளவனுக்கும், தலைமை காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனா்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தரமணி சட்டக் கல்லூரி மாணவா்கள், வேளச்சேரி காவல் நிலையத்தை வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அவா்கள், அங்கு சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த கிண்டி உதவி ஆணையா் விஜயராமுலு, மாணவா்களுடன் பேச்சு நடத்தினா். இதில் சமாதானமடைந்த மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.