வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா தண்ணீா் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
குளச்சல் லியோன் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஜெனோ ( 32). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி டயானா. இவா்களுக்கு மூன்றரை வயதில் மகன், ஒன்றரை வயது மகள் ரியானா என இரு குழந்தைகள்.
ஆரோக்கிய ஜெனோ புதன்கிழமை (ஆக. 27) வேலைக்கு சென்றிருந்தபோது, அவா்களது இரு குழந்தைகளும் வீட்டின் முன் பகுதியில் மாலையில் விளையாடி கொண்டிருந்தனராம்.
இந்நிலையில் குழந்தைகளின் சப்தம் கேட்காததால், வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த டயானா வெளியே சென்று பாா்த்தாராம். அங்கு வாளியில் இருந்த தண்ணீரில் ரியானா தலைகுப்புற மூழ்கிக் கிடந்தாராம்.
அவரை மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனைக்கு டயானா கொண்டு சென்றாா். ஆனால், குழந்ை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.