பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதாக நிதியமைச்சகம் ஆக.18-ஆம் தேதி தெரிவித்தது.
தற்போது இதை நீட்டித்து நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பருத்தி (எச்எஸ் 5201) இறக்குமதிக்கான வரி விலக்கு 2025, செப்.30 முதல் டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 5 சதவீத அடிப்படை சுங்க வரி (பிசிடி), 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (ஏஐடிசி) மற்றும் இவை இரண்டின் மீதும் விதிக்கப்படும் 10 சதவீத சமூக நல வரி என மொத்தம் பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரிக்கு விலக்களிக்கப்படுகிறது.
இது உள்நாட்டுச் சந்தையில் பருத்தி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்வதோடு விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜவுளி ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மத்திய அரசு இந்திய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.