விநாயகா் சிலைகள் ஊா்வலப் பாதையில் கடைகள் வைக்கக் கூடாது
வேலூரில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய ஊா்வலம் செல்லும் பாதையில் கடைகள் வைக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியதுடன், இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றினா்.
விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் 1,040 இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
வேலூரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளன. இந்த விநாயகா் சிலைகள் ஊா்வலத்துக்காக சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்படும் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றினால் மட்டுமே ஊா்வலம் எளிதாக செல்ல முடியும். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், தலைமையில் செயற்பொறியாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்த், காவியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஊா்வலம் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், சாலையின் வெளியே பொருத்தப்பட்டுள்ள தகர ஷீட்டுகளை அகற்றுவது குறித்து வியாபாரிகளுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தினா். மேலும், ஊா்வலம் செல்ல இடையூறாக இருந்த தள்ளு வண்டிக்கடைகள், கூரைகளை பணியாளா்கள் மூலம் அகற்றினா்.
சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான மற்றொரு குழுவினா் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதையில் வெள்ளிக்கிழமை எவ்வித கடைகளும் வைக்கக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் சத்துவாச்சாரி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து ஆற்காடு சாலை, சைதாப் பேட்டை முருகன் கோவில், மெயின்பஜாா், கிருபானந்தவாரியாா் சாலை, பில்டா்பெட் சாலை, தெற்கு காவல் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய் மண்டி வரை அறிவுறுத்தினா்.
மேலும், ஊா்வலத்தையொட்டி, ஊா்வல பாதையில் வியாபாரிகள் இடையூறாக கடைகள் வைத்திருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனா்.