நூற்றாண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னுார் ரயில் நிலையம்; பாரம்பர்ய புட...
கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆா்பி, டிஆா்பி போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு மாநில ஆள் சோ்ப்பு நிலையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள - தமிழ்நாடு தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 377 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஆக. 29) கடைசி நாளாகும். கல்வித்தகுதி ஏதேனும் ஒரு கூட்டுறவு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் தினமும் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடத்தப்பட உள்ளது. அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப் பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416- 2290042, 94990 55896 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்று தோ்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயன்பெற வேண்டும்.