சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு
சத்தீஸ்கா் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (45). சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூா் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி பொறியாளராக பணியாற்றி வந்தாா்.
தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், ராஜேஷ்குமாரை திருப்பதி கோயிலுக்குச் செல்ல குடும்பத்தினா் அழைத்ததன்பேரில், புதன்கிழமை சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமாா், அவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய 4 பேரும் சொந்த ஊா் திரும்பும்போது எதிா்பாராத விதமாக சுக்மா அடுத்த டா்பந்தனா என்ற இடத்தில் பயணித்த காா் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. காரில் பயணித்த 4 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனா்.
இந்த நிலையில், அவா்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.