`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்!
''உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவையிரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், சில வைட்டமின்கள் நமக்கு தேவை.
இதேபோல், இளம் தலைமுறையினர் அதிகம் சொல்கிற மூட் ஸ்விங் (mood swings). உண்மையில் மனித மனத்தின் உணர்வுகள் மகிழ்ச்சி, துக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊசலாட்டத்தன்மையுடன் இருக்கும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஒருசிலர் மகிழ்ச்சி வந்தால் தலை கால் புரியாமல் இருப்பார்கள். துக்கம் வந்தால், ஒரு சிலர் சாப்பிடக்கூட செய்யாமல் துக்கத்தில் சுருண்டுபோய் விடுவார்கள்.
இப்படி இல்லாமல் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவும் சில சத்துக்கள் தேவைப்படுகின்றன'' என்கிற மனநல மருத்துவர் டாக்டர் சுபா சார்லஸ், அவைபற்றி விவரித்தார்.

''நடுத்தர வயதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, தைராய்டு போன்றவற்றை பரிசோதனை செய்கையில், கூடவே வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 போதுமான அளவு இருக்கிறதா என்றும் பரிசோதிக்க சொல்கிறார்கள், இந்தக் கால மருத்துவர்கள்.
அந்தளவுக்கு இந்த வைட்டமின்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநலனுக்கும் அவசியமாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் விவசாயம் செய்கையில், தினமும் நம் மீது சூரிய ஒளி பட்டது. அதனால் வைட்டமின் டி-யை போதுமான அளவுக்கு உடம்பே தயாரித்துக்கொண்டது. ஆனால், இன்றைக்கு சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது.
பெரும்பாலும் மூடிய ஏ.சி அறைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய இதய நலனில் ஆரம்பித்து மனநலன் வரைக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் டி அவசியம்.

தற்போது உடலுழைப்புக் குறைந்துவிட்டதும், மூளை உழைப்பு அதிகரித்துவிட்டதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்த மூளை நலமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் பி 12 அவசியம்.
இந்த வைட்டமின் குறைந்தால் உடலில் இரும்புச்சத்தும் குறையும்; ரத்தசோகையும் வரும்.
இந்த 2 வைட்டமின்களுமே நம்முடைய மனதை நிலைப்படுத்துபவை என்பதால், இவற்றை மெடிக்கல் ஷாப்களில், 'ஓவர் த கவுன்ட்டர்' வாங்கி சாப்பிட முடியும். அந்தளவுக்கு முக்கியமான மாத்திரைகள் இவை. அதனால், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வாக உணர்ந்தீர்களென்றால், அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பிரச்னைகளை சொன்னீர்களென்றால், எவ்வளவு நாள், என்ன அளவில் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்குவார்கள்.
தவிர, இந்த இரண்டு வைட்டமின் மாத்திரைகளையும் ஒரு மாதம், இரண்டு மாதம் என சாப்பிட்டு விட்டு நீங்களாகவே நிறுத்தி விடக்கூடாது. இதனால், மறுபடியும் இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் உடலில் ஏற்படலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மனதை நிலைப்படுத்துவதில் மேலே சொன்ன இரண்டு வைட்டமின்களைப்போலவே மெக்னீஷியம் சத்தும் அவசியம். அந்தக் காலத்தில், விவசாயத்தில் மெக்னீஷியம் சல்பேட் அல்லது எப்சம் சால்ட் உரமாக பயன்படுத்தப்பட்டது.
கடலில் உப்பளங்களில் உப்பு விளையும். உப்பை அறுவடை செய்தவுடன், கீழே எப்சம் சால்ட் படிந்திருக்கும். அதை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள்.
ஆனால், கடந்த 50 வருடங்களாக இந்த எப்சம் சால்ட்டில் இருக்கிற மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது.
இதனால், நம்முடைய உணவுகளில் மெக்னீஷியம் சத்து குறைந்துவிட்டது. விளைவு மூட் ஸ்விங். இதற்கு மெக்னீஷியம் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிய பிரச்னைக்கும் மனதளவில் ஒடுங்கிப் போய்விடுகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...