சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு
பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நபா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இறந்தவா் உத்தரப்பிரசேத மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்திரபலாவி (43) என்பதும், வேலை நிமித்தமாக பள்ளிகொண்டா பகுதியில் தங்கியிருந்த இவா் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.