தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து
திருச்சியில் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் செயல்பட்டு வரும் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வியாழக்கிழமை காலையில் தீப்பிடித்து புகை வெளியேறியது.
தகவலின்பேரில், அங்கு வந்த மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயை அணைத்தனா்.
அப்போது, நிறுவனம் பூட்டியிருந்ததால் பொருள்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.