செய்திகள் :

50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... பிளான் B, C, D!

post image

‘எப்போதுமே மாற்றி மாற்றிப் பேசும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தக் கூடுதல் 25% வரியைத் திரும்பப் பெற்றுவிடுவார்’; ‘இந்திய அரசு அமெரிக்காவுடன் வரி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வை எட்டும்’ என்றெல்லாம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தடவை மாற்றிப் பேசவில்லை ட்ரம்ப். விளைவு, ஏற்கெனவே இந்திய மீது 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.

ஆரம்பத்தில் ட்ரம்ப் இந்த வரிகள் பற்றி அறிவித்தபோது, ‘இதனால் பெரிதாக இந்தியாவுக்குப் பாதிப்பில்லை’ என்றே பலரும் கருத்துக் கூறினார்கள். ஆனால், இந்த 50% வரி விதிப்பு பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, ஜவுளித் துறைக்குத்தான் அதிக பாதிப்பு. காரணம், இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 30% அமெரிக்காவுக்குத்தான்!

திருப்பூர், சூரத் போன்ற ஜவுளி உற்பத்தி நகரங்களில், பல நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ளன. அதேசமயம், அமெரிக்கா தவிர, மாற்றுச் சந்தைகளை ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தேடி வருகின்றனர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 40 நாடுகளுக்கு, இந்தியாவின் ஜவுளிப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நாடுகள் மட்டுமே 590 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளிப் பொருள்களை இறக்குமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற முயற்சிகள் இந்திய ஜவுளித் துறைக்குச் சற்று ஆறுதலாக அமைந்திருப்பது, வரவேற்கத்தக்க விஷயமே. ஆனால், இதுபோன்ற ‘பிளான் பி’ திட்டங்கள், முன்கூட்டியே தீட்டப்பட்டிருக்க வேண்டும். B மட்டுமல்ல... C, D என்று அடுத்தடுத்த பிளான்களைத் தயாராக வைத்திருக்க வேண்டியது, இன்றைய சூழலில், காலத்தின் கட்டாயமே.

இப்படி மாற்று ஏற்பாட்டுக்கானத் திட்டங்களைத் தீட்டுவதற்கு, உள்நாட்டு உற்பத்தியையும், உள்நாட்டுச் சந்தையையும் முதலில் ஸ்திரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தயாரிப்புகளை உலகத்தரத்துக்கு மேம்படுத்த வேண்டும். அதேபோல, இறக்குமதியாகும் பொருள்களில் நாமே உற்பத்தி செய்யக்கூடியவற்றைக் கண்டறிந்து, உள்ளூரில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும். வட இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்படும் ராக்கி கயிறுகூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது, வேதனையே!

நாம் சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம். இன்று அமெரிக்கா என்றால், நாளை ரஷ்யாகூட நெருக்கடி கொடுக்கலாம். எனவே, கண்கெட்ட பிறகல்ல... முன்கூட்டியே அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்குமான பி, சி, டி என மாற்றுத் திட்டமிடல்களை எப்போதுமே தயாராக வைத்திருக்க வேண்டும். அதுதான் செயல்திறன்மிக்க அரசுக்கு அழகு!

இனியாவது விழித்துக்கொள்வோம்!

- ஆசிரியர்

ICICI balance: ``90% இந்தியர்களின் மாதச் சம்பளம் ரூ.25,000-க்கும் குறைவு'' - ஜெய் கோடக் விமர்சனம்

ICICI வங்கி குறைந்தபட்ச வைப்புத்தொகையை 5 மடங்கு உயர்த்திய நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக்கின் மகனான ஜெய் க... மேலும் பார்க்க

ஆனந்த் மகிந்திரா: `ட்ரம்பின் 50% வரியை 'பயன்படுத்தி' நல்ல விளைவுகளை பெறலாம்' - தொழிலதிபரின் ஐடியா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிகளின் "எதிர்பாராத விளைவுகளால்" ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா வியாபாரத்தை எளிமையாக்கவும், உலக முதலீடுகளின் தவிர்க்கமுடியாத மையமாக மாறவும் வே... மேலும் பார்க்க