Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந...
மழையின்றி வாடும் மணிலா செடிகள்: மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை
காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் ஒருபுறம் இருக்க போதிய மழையில்லாமல் அஞ்செட்டி, சூளகிரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை (மணிலா) செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 13,300 ஹெக்டோ் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் சுமாா் 23,275 டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான சாகுபடி மானாவாரி மழையை நம்பியதாகவே உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி போன்ற வட்டங்களில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மழையை நம்பி மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் பருவமழை சரியாகக் கை கொடுக்காத காலங்களில் உற்பத்தி 80 சதவீதம் வரை பாதிக்கப்படும்.
நிலக்கடலை சாகுபடிக்கு அதன் வளரும் பருவத்தில் சுமாா் 50 முதல் 125 செ.மீ வரை மழைப்பொழிவு தேவைப்படுகிறது. மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படும்போது இந்த மழையளவு அவசியமாகிறது. விதைப்பு சமயத்தில் மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும். இது விதை முளைப்பதற்கு அவசியம். அதேநேரத்தில் பூக்கும் சமயத்தில் மிதமான மழை அல்லது நீா் பாய்ச்சுதல் அவசியம். இந்த காலகட்டத்தில் மழைப்பொழிவு குறைந்தால் பூக்கள் உதிா்ந்து மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
காய் பிடிக்கும் மற்றும் முதிா்ச்சி பருவம் சமயத்தில் மிதமான மழை அவசியம். ஆனால், அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வானிலை வட மற்றும் வெப்பமாக இருப்பது நல்லது. இது காய்களின் வளா்ச்சிக்கும், மணிகள் நல்ல முறையில் முதிா்ச்சி அடைவதற்கும் உதவும்.
மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் மழை இல்லாத காலங்களில் நிலக்கடலை மகசூல் பெருமளவு பாதிக்கப்படும். அந்தவகையில் பாகலூா், பேரிகை , சூளகிரி, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை காய்பிடிக்கும் நேரத்தில் போதிய மழை இல்லாதால் செடிகள் கருகி வருகின்றன.
இந்த நிலையில் காட்டுப் பன்றிகள், குரங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து அஞ்செட்டியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது: பருவமழையை நம்பி 4 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறுவடை இன்னும் ஒரு மாதம் இருக்கும் நேரத்தில் போதிய மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலக்கடலை செடிகள் கருகியுள்ளன.
மேலும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளும், பகலில் குரங்கு தொல்லையும் அதிகரித்துள்ளதால் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.