ஒசூா் சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை
ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
அதேநேரம் சானமாவு வனப்பகுதியையொட்டி செல்லும் சென்னை- பெங்களூரு சாலையை ஒற்றை யானை அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
வனப்பகுதியையொட்டி போடூா், ஆழியாளம், நாயக்கனப்பள்ளி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி, அம்பலட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வயல்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்துவருவதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை கடந்துசென்றது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட நேரத்துக்கு சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.
இந்த யானை வேப்பனப்பள்ளி பகுதியில் இருந்து சூளகிரி வனப்பகுதி வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளது. தற்போது சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் விவசாய நிலத்தில் இரவுநேர காவலுக்குச் செல்வதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.