``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத்...
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 574 கிலோ கஞ்சா அழிப்பு
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 574 கிலோ கஞ்சாவை எடப்பாடி அருகே போலீஸாா் வியாழக்கிழமை தீயிலிட்டு அழித்தனா்.
அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வருகின்றனா். இதைத் தடுக்கும் நோக்கில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டு கடத்தலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ததுடன், அவா்கள் கடத்தி வந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 880 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேலும் பல்வேறு கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 574 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் வியாழக்கிழமை எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில், கோணமோரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் ஆலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. அங்கு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் முன்னிலையில் போலீஸாா் கஞ்சா பொட்டலங்களை தீயிலிட்டு அழித்தனா்.
கஞ்சா பொட்டலங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகும்வரை அப்பகுதியில் சேலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட காவல் துறை உயா் அலுவலா்கள் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.