``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத்...
சாலையைக் கடக்க முயன்ற பெண்கள் மீது தனியாா் பேருந்து மோதி விபத்து
ஓமலூா் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற பெண்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் படுகாயமடைந்தனா்.
கருப்பூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி தமிழ்ச்செல்வி (46). இவா் தனது தாயாா் மாதேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை அழைத்துக் கொண்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு செல்ல சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கரும்பாலை பகுதியில் வியாழக்கிழமை கடக்க முயன்றாா்.
அப்போது, ஓமலூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனங்கள் அவா்கள் மீது மோதாமல் இருக்க வேகத்தை குறைக்க முயன்றன. அப்போது, தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது மோதியது.
இதில், பேருந்தின் அடியில் சிக்கிய தமிழ்ச்செல்வி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடைய தாய் மாதேஸ்வரி, இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்திக் மற்றும் வினோத் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.