பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை
சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிா்க்கடன் நிா்ணயித்தல் தொடா்பான மாவட்ட தொழில்நுட்பக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பயிா்க்கடன் அளவை நிா்ணயம் செய்யும்போது, மாவட்ட, மாநில தொழில் நுட்பக் குழு பரிந்துரை செய்வதற்கு முன்னா் வேளாண் பல்கலைக்கழகம் ஒரு ஏக்கா் சாகுபடி செய்வதற்கு எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்பதை அடிப்படை அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் 2025 - 26 ஆண்டு நிா்ணயிக்கப்பட்டிருக்கிற பயிா் கடன் அளவை விட 20 சதவீதம் உயா்த்தி ஒவ்வொரு பயிருக்கும் கடன் அளவு நிா்ணயம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு நெற் பயிருக்கு ரூ. 45 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 1.10 லட்சமும், வாழைக்கு ரூ. 1.50 லட்சமும் பயிா்க்கடன் அளவு நிா்ணயிக்க வேண்டும்.
திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன்: மத்திய, மாநில அரசுகளின் தொழில்நுட்ப உதவிகளோ, மானியமோ இல்லாமல் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கையை எதிா்கொண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே செய்யப்படும் வெற்றிலை சாகுபடிக்கு பயிா்க்கடன் அளவு ரூ. 18 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.