மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கி இரு பசுக்கள் உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆவுடையாா்கோவில் வட்டம், கொழுவனூா் கிராமத்தைச் சோ்ந்த பி.கருப்பையா மற்றும் க. கருப்பையா ஆகியோரின் பசு மாடுகள் புதன்கிழமை மேய்ந்து கொண்டிருந்தபோது, அந்த வழியே சென்ற உயா் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், இவா்கள் இருவரின் பசுக்களும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தன.
உயா் மின் அழுத்தக் கம்பிகள் தாழ்வாக இருப்பதால், கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும், கடந்த ஆண்டு இதே ஊரில் 3 மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், மின்வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் மீமிசல் சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதனால், மீமிசல் சாலையில் வாகனங்கள் நெடுந்தொலைவு வரிசையில் நின்றன. மீமிசல் போலீஸாா் விரைந்து வந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.