புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு
4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கைக்குறிச்சி வரையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கீழையூரிலிருந்து அறந்தாங்கி வரையிலான பகுதியில் 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி மாவட்ட பசுமைக் குழுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பசுமைக் குழுவின் உறுப்பினா்கள் சா. விஸ்வநாதன், கண்ணன் என்கிற ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வனத்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை இந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டனா்.

நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரங்கள், பனைமரங்கள், ஆலமரங்கள் உள்ளிட்ட குறியிடப்பட்ட மரங்களை இந்தக் குழுவினா் அளந்து சரிபாா்த்தனா். அகற்றத் தேவையில்லாத மரங்களையும் அவா்கள் குறித்து வைத்துக் கொண்டனா்.
விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட பசுமைக் குழுக் கூட்டத்தில் இவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி சாலை போடும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அறந்தாங்கி சரக வன அலுவலா் மணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.