நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நத்தம் மனையிடத்திலுள்ள குடிசையை இடிக்க முயலும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகா் பகுதியில் உள்ள மணிப்பள்ளம் சாலை அருகே நத்தம் மனையிடத்தில் கருப்பையா மகன் சாந்தாா் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் செய்து வந்தாா். இந்த அனுபவப் பாத்தியத்தை முன்னிட்டு சாந்தாரின் வாரிசுகள் வடிவுக்கரசி, பாண்டியன் ஆகியோா் நத்தம் நிலவரித் திட்டத்தின் மூலம் பட்டா பெற்றுள்ளனா். அதன்பிறகு அந்தப் பட்டாவுக்கு வருவாய்த் துறையின் மூலம் பதிவுப் பத்திரம் பெற்று நகராட்சிக்கு வரியும் செலுத்தி வந்துள்ளனா்.
இந்நிலையில், இந்த இடத்துக்கு பின்பகுதியிலுள்ள இடத்தை வாங்கியுள்ளவா்கள், தங்களின் பாதைத் தேவைக்காக இவ்விடத்தை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் எனப் போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் ஆணையைப் பெற்றுள்ளனா்.
நீதிமன்ற ஆணையைக் காட்டி குடிசைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் அளித்துள்ளனா். இதைக் கண்டித்தும், ஆவணங்களைச் சரிபாா்த்து நெடுஞ்சாலைத் துறையே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், ஏ. ஸ்ரீதா், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோரும் பேசினா். தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.