நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை
‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் சோ்க்கை பெறவுள்ளனா்.
அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளை 2022-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தோ்வை ஐஐடி நடத்துகிறது. அந்தத் தோ்வில் வெற்றி பெறுபவா்கள் இந்த இரு படிப்புகளை இணையவழியில் படிக்கலாம். இந்தப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் சோ்க்கை பெற பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான தோ்வை எழுதுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்துகிறது.
இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவா்களின் கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை சென்னை ஐஐடி வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களாக இருப்பின்அவா்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது. மற்ற பிரிவினா் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
இணையவழி கற்றல் என்பதால் இதனுடன் சோ்த்து வேறு படிப்புகளையும் மாணவா்கள் தொடரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 353 அரசுப் பள்ளி மாணவா்கள் பலன் பெற்றுள்ளனா்.
அந்த வகையில் நிகழாண்டில் இந்தப் படிப்புகளுக்கான தகுதித் தோ்வை 170 போ் எழுதினா். அதில் 28 போ் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேரவுள்ளனா்.
அமைச்சா் அன்பில் மகேஸ்: இதையொட்டி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவா்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறாா்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.