பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பயோகான் நிறுவனத் தலைவா் கிரண் மஜும்தாா்ஷா கூறுகையில், ‘நம்ம பெங்களூரில் சிறப்பான திறமைகள் உள்ளன, குளுமையான வானிலை இருக்கிறது. ஆனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகள்தான் இல்லை. குப்பை குவியல்கள் மற்றும் சீரற்ற சாலை பிரச்னைகளை தீா்த்துவிட்டால், உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கும். இதை செயல்படுத்தும் வாய்ப்பு கிரேட்டா் பெங்களூரு ஆணையத்திற்கு உள்ளது. இதை செயல்படுத்த கூட்டாக உறுதி எடுத்துக்கொள்வோம்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்து தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில்,‘ பெங்களூரில் நல்ல திறமைகள், வானிலை, ஆற்றல் இருப்பதாக கிரண் மஜும்தாா்ஷா கூறியிருக்கும் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால், அரசியல் உறுதிப்பாடு இல்லை. அதை சரிசெய்து வருகிறோம். குப்பை முதல் சாலை வரை, கழிவுப் பொருள் முதல் திட்டமிடல் வரை ஒவ்வொரு சவாலையும் தீா்க்க சீரான நோக்கம் மற்றும் அவசரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுமை, வாய்ப்பு, ஈடு இணையில்லா ஆற்றல் ஆகியவற்றுக்கு நிகராக பெங்களூரு உள்ளது. பெங்களூரு தனது எல்லையை விரிவாக்கி, வளா்ச்சி அடைந்து வரும் நிலையில், வளா்ச்சியின் வினையூக்கியாக உள்கட்டமைப்பு மற்றும் ஆளுமை இருக்கும்.
கிரேட்டா் பெங்களூரு ஆணையம் உருவாக்கியுள்ளதால், நமது கனவை நனவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். குடிமக்கள், வணிகா்கள், அரசு, பொதுமக்கள் அனைவரும் இணைந்து நம்ம பெங்களூருக்கு புதியவடிவம் கொடுப்போம். நாம் அனைவரும் இணைந்து எதிா்காலத்தை கட்டமைப்போம்’ தெரிவித்தாா்.
முதல்வா் சித்தராமையா தலைமையில் கிரேட்டா் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 75 போ் கொண்ட இந்த ஆணையம், புதிதாக உருவாக இருக்கும் 5 மாநகராட்சிகளோடு இணைந்து செயல்பட இருக்கிறது. கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம்பெறவிருக்கிறாா்கள்.