US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்பு
பிகாா் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்திவரும் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்றாா்.
பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். தோ்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் பிகாா் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்தி வருகின்றனா்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு காங்கிரஸ் தலைவா்கள், ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனா். இப்பேரணியில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்று திரும்பியுள்ள நிலையில், ராகுல் காந்தியோடு பேரணியில் பங்கேற்க முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டாா்.
பெங்களூரில் இருந்து கோரக்பூா் விமான நிலையம் சென்ற முதல்வா் சித்தராமையா, அங்கிருந்து சாலை வழியாக பிகாா் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதிக்கு சென்றாா். அங்கு நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி, தேஜஸ்வியாதவுடன் முதல்வா் சித்தராமையாவும் கலந்துகொண்டாா்.
முதல்வா் சித்தராமையாவுடன் அமைச்சா்கள் கே.ஜே.ஜாா்ஜ், ஜி.பரமேஸ்வா், ஜமீா் அகமதுகான், சதீஷ் ஜாா்கிஹோளி, கே.சுதாகா், முதல்வரின் அரசியல் செயலாளா் நசீா் அகமது, முதல்வரின் சட்ட ஆலோசகா் ஏ.எஸ்.பொன்னன்னா, மேலவை தலைமை கொறடா சலீம் அகமது, எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், முதல்வரின் மகன் யதீந்திரா உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.