ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
திருப்புவனம்: `காணாமல் போன நகை' - நிகிதா புகார்; சிபிஐ வழக்கு பதிவு
மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பாக பேராசிரியர் நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது அஜித்குமார் கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், கடந்த ஜூன் 27 ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் சட்டவிரோதமான விசாரணையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா, அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சகோதரர் நவீன் மற்றும் நண்பர்கள், அஜித்குமார் குடும்பத்தினர் உள்ளிட்ட பல நபர்களிடமும் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார்தாரரான நிகிதா ஜூன் 27 ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு காரில் சென்றபோது, காரில் இருந்த நகை காணாமல் போனதாக அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் “அன் நவுன் பெர்சன்” என குறிப்பிடப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், நிகிதா மற்றும் அவரது தாயார், கொலையான அஜித்குமாருடன் பணியாற்றிய பணியாளர்கள், கோயில் அலுவலர்கள், திருப்புவனம் காவல்துறையினர் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் உண்மையில் நிகிதாவின் நகை காணாமல் போனதா? இல்லையா? என்பது தெரிய வரும் என்கிறார்கள்.