திருத்தணி: கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு - போலி பெண் டாக்டர் சிக்கிய பின்னணி!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்தனர். அந்த சிறுவன், மாணவிக்கு சகோதரர் உறவு முறையாகும். அதனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் மாணவியை அழைத்துக் கொண்டு சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து மாணவி தரப்பில் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுவனைப் பிடித்த போலீஸார் அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர். இந்தச் சூழலில்தான் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிந்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் கலைக்க முடிவு செய்த மாணவியின் குடும்பம், ஆந்திர மாநிலம் பண்ணூர் என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மருத்துவம் படிக்காத பெண் ஒருவர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்திருக்கிறார். பின்னர் மாணவியை அழைத்துக் கொண்டு அவரின் குடும்பம் தங்களின் சொந்த ஊருக்கு வந்தனர். கருக்கலைப்பு செய்த பிறகு மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவரை திருத்தணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் மாணவியின் உடல் நலம் மோசமானது. அதனால் வேறுவழியின்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரின் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு மாணவிக்கு கருக்கலைப்பு செய்தது யாரென்று விசாரித்தனர். விசாரணையைத் தொடர்ந்து ஆந்திராவுக்குச் சென்ற போலீஸார், கருக்கலைப்பு செய்த பெண், அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் என இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த மாணவியின் குடும்பத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.