பாகிஸ்தான் பெருவெள்ளம்: படகில் சென்ற பத்திரிகையாளரின் நேரலை வைரல்!
கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 739 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
செப்டம்பர் மாதம் வரை கடுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், ஒன்பது மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த மழை வெள்ளம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த பத்திரிகையாளர் மெஹ்ருன்னிசாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை, 2008-ல் கராச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்த் நவாப் ரயில் நிலையத்தில் தனது அறிக்கையை பதிவு செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட சிரமங்களைப் போலவே இருப்பதாக, மக்களால் ஒப்பிடப்பட்டு வருகிறது.
வைரலாகும் வீடியோவின் படி, வெள்ள நீரில் படகில் இருந்து செய்திகளை நேரடி ஒளிப்பரப்பு செய்த மெஹ்ருன்னிசா தனது தொனியை விட்டுவிட்டு, தனது பயத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இரண்டு தனித்தனி வீடியோக்களில் படகு ஆடும்போது அவர் பயத்தில் கத்துவதைக் காணலாம்.
“எனது இதயம் கீழே போகிறது. நண்பர்களே, எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் மிகவும் அசௌகரியமாகவும் பயமாகவும் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. களத்திற்கு சென்று இவ்வாறு செய்தி சேகரிப்பில் ஈடுபடும் பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.