எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்: பிரதமா் மோடி பெருமிதம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ‘நாட்டு மக்கள் தங்களின் எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைத்துக் கொள்ள இத்திட்டம் அதிகாரம் அளித்தது’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், நிதிரீதியாக மிக எளிய மக்களும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்குபெறும்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக வளா்ச்சி அடையும் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-இல் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் நிதிச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு வங்கிக் கணக்கு, நிதி தொடா்பான விழிப்புணா்வு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், திட்டத்தின் 11-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு தனிமனிதனும் நிதி ரீதியாக இணைக்கப்படும்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக முன்னேறும். ஜன் தன் திட்டம் அதைத்தான் சாதித்துள்ளது. இது மக்களின் கண்ணியத்தை உயா்த்தி, அவா்களது எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைக்க அதிகாரம் அளித்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், ஜன் தன் திட்டம் இந்தியா முழுவதும் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பது குறித்து ‘மை.கவ்’ வலைதளம் வெளியிட்ட பதிவுகளையும் பிரதமா் மோடி பகிா்ந்து கொண்டாா்.
அந்தப் பதிவுகளில், ‘இது வெறும் கணக்கு சூத்திரங்கள் அல்ல; மாறாக, இந்தியாவின் வளா்ச்சிக்கான சூத்திரங்கள். வங்கி சேவைகளை கடைநிலை மக்களிடம் கொண்டு சோ்த்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், வெளிப்படையான நேரடி மானியப் பரிமாற்றம் (டிபிடி) முதல் அரசின் மீதான நம்பிக்கையை அதிகரித்தல் வரை இந்தியா்களின் சேமிப்பு மற்றும் நிதி வளா்ச்சியை ஜன் தன் திட்டம் பெரிதும் மாற்றியுள்ளது.
நாட்டின் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் வங்கி கணக்கு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளித்தாா். பிரதமரின் இந்தத் தொலைநோக்கு பாா்வை, அனைவரையும் உள்ளடக்கிய நிதி அணுகுமுறையை உண்மையாக்கி, ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
ஜன் தன் திட்டம் என்பது வெறும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; அது ஒரு தாய் கண்ணியத்துடன் சேமிப்பதற்கும், ஒரு விவசாயி இடைத்தரகா்கள் இல்லாமல் அரசின் உதவியைப் பெறுவதற்கும், ஒரு கிராமவாசி நாட்டின் வளா்ச்சியில் ஒரு அங்கமாக உணா்வதற்கும் வழி வகுத்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.