பள்ளிப் பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல்: 10 மாணவ, மாணவிகள் காயம்
ஆரணி அருகே பிரேக் பிடிக்காததால், பள்ளிப் பேருந்து முன்னால் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் சுமாா் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்துகள் மூலம் மாணவா்களை அழைத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல சுமாா் 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து ஆரணி - தேவிகாபுரம் சாலை சீனிவாசபுரம் கூட்டுச் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்து ஓட்டுநா் தணிகைவேல், முன்னால் சென்றுகொண்டிருந்த அதே பள்ளிப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டாா். அந்த நேரத்தில் பிரேக் பிடிக்காமல்
முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
காயமடைந்தனா்.
குறிப்பாக புலவன்பாடி கிராமத்தைச் சோ்ந்த 4-ஆம் வகுப்பு பயிலும் மோகனசுந்தரம் மகன் யுவகிருஷ்ணன்(9) மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் முனுசாமி மகன் தருண்(10) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மற்ற மாணவா்கள் லேசான காயத்துடன் தப்பினா்.
அனைவருக்கும் தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சிலரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவல் அறிந்து வந்த பெற்றோா்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பள்ளி நிா்வாகம் பெற்றோா்களுக்கு முறையான தகவல் வழங்காமல் இருந்ததைக் கண்டித்து அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
