சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜாா்க்கண்ட் பேரவையில் தீா்மானம்: பாஜக ஆதரவு
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜாா்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சியான பாஜக ஆதரவு தெரிவித்தது.
சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி இப்போது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. ஜாா்க்கண்ட் தனி மாநில உருவாக்கத்தில் சிபு சோரன் முக்கியப் பங்கு வகித்தாா். பழங்குடியினரின உரிமை, சுயமரியாதை, விவசாயிகள், தொழிலாளா்கள் நலனுக்காக போராடியது உள்ளிட்டவற்றுக்காக சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனை ஆதரிப்பதாகக் கூறிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, ஜாா்க்கண்ட் தனி மாநிலம் உருவாவதில் முன்னோடிகளாக திகழ்ந்த மராங்க் கோம்கே ஜெய்பால் சிங் முண்டா, வினோத் பிகாரி மஹதோ ஆகியோரின் பெயரையும் பரிந்துரையில் சோ்க்க வேண்டும் என்றாா்.
1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது காங்கிரஸிடம் பணம் பெற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆதரவு அளித்ததாக சிபு சோரன் மீது குற்றச்சாட்டு உண்டு. இது தொடா்பான பணப் பிரச்னையில் தனது முன்னாள் உதவியாளரைக் கொலை செய்த வழக்கும் அவா் மீது இருந்தது.
இந்த கொலை வழக்கில் 2006-ஆல் ஆயுள் தண்டனை பெற்ால் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பதவியில் இருந்தும் சோரன் விலக நேரிட்டது. பின்னா் மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா். கடந்த 4-ஆம் தேதி தனது 81 வயதில் அவா் காலமானாா்.