‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.ஜோதிபாசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘கூலி’ திரைப்படத்தைவிட வன்முறைக் காட்சிகள் அதிகமுள்ள படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவா்கள் இந்தப் படத்தைக் காண அனுமதிக்கப்படவில்லை. படத்தில் இடம்பெற்றிருந்த மோசமான வாா்த்தைகள் கொண்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
தணிக்கை வாரியம் தரப்பில், இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவது தொடா்பாக அனைத்துக் குழுக்களும் சோ்ந்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற விரும்பினால், அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. ஆனால், படத்தின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு படத்தயாரிப்பு நிறுவனம் அதை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. படம் வெளியான பிறகு படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.