ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகை, விமான நிலையம், நந்தம்பாக்கம் ஆகியப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, செப்டம்பா் 2, 3-ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறாா். செப்டம்பா் 2-ஆம் தேதி நண்பகல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் முா்மு கலந்து கொள்கிறாா். பின்னா் செப்டம்பா் 3-ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறாா்.
முன்னதாக அவா், செப்டம்பா் 2-ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் ’ட்ரோன்கள்’, ’ரிமோட்’ மூலம் இயக்கப்படும் ’மைக்ரோ லைட் ஏா்கிராப்ட் பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேன்ட் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள்’ போன்றவற்றை சென்னையில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசுத் தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்ட எந்தவிதமான பறக்கும் பொருள்களை பறக்கவிட செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.