தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மற்றும் வெள்ளத்தினால், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பருவமழையின் தாக்கம் அதிகரித்து பெய்த கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், தெலங்கானாவிலும் கடந்த ஆக.27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது.
காமரெட்டி மற்றும் மெடாக் ஆகிய மாவட்டங்களில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது பதிவாகியுள்ள நிலையில், ஏராளமான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும், சுவர் இடிந்த சம்பவங்களினாலும் குறைந்தது 5 பேராவது பலியாகியிருக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெடாக், காமரெட்டி, ராஜண்ணா சிர்சில்லா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற தேசிய, மாநில பேரிடர் படைகள் மற்றும் ராணுவப் படைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், இன்று (ஆக.28) வெள்ளத்தில் சிக்கிய 8 கிராமவாசிகள் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரின் மூலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!