Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?
பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார் சன்னி. அதே நேரத்தில் சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தென்படுவதையும் கவனிக்கிறார்.

ஒரு நாள், சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காக்கக் களமிறங்குகிறார் சன்னி. அவர் சந்திராவை மீட்டாரா, சந்திராவைச் சுற்றும் அமானுஷ்யங்கள் என்ன என்பதுதான் மல்லுவுட்டின் இந்த ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ படத்தின் கதை.
சூப்பர் பவர் கொண்ட சந்திராவாக கல்யாணி ப்ரியதர்ஷன் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும், தனது அடையாளத்தை மறைக்கச் சாந்தமாக அனைத்தையும் கையாளும் இடத்திலும் சூப்பர் ஹீரோயினாக மிரட்டுகிறார். முக்கியமாக, ஆக்ஷன் காட்சிகளில் பெரும் சிரத்தை கொடுத்து உழைத்திருக்கும் அவருக்கு ஸ்பெஷல் விசில் போடலாம்.
பயந்த சுபாவம் கொண்டவராக, தனது டிரேட்மார்க் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்குக் கணக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் நஸ்லென். ஆங்காங்கே அவர் நிகழ்த்தும் காமெடிகளும் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருக்கின்றன. சீரியஸ் காட்சிகளிலும் அவருடைய உடல் மொழி, திரையரங்குகளைச் சிரிப்பொலிகளால் நிரப்புகிறது.

பெண்களை வெறுப்பவராகப் படம் முழுக்க டெரர் வில்லனாக வரும் சாண்டி நடிப்பில் அவ்வளவு ஆழம்! க்ளைமாக்ஸ் காட்சியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வில்லனிசத்தில் கதகளி ஆட்டம் ஆடியிருக்கிறார் மாஸ்டர்!
காமெடி காட்சிகளுக்குப் பக்கபலமாக உடன் நிற்கும் அருண் குரியன், சந்து சலிம்குமார் நடிப்பில் குறையேதுமில்லை. இவர்களைத் தாண்டி, இந்த சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை பெரிதாகக் கட்டமைத்திட வைக்கப்பட்டிருக்கும் கேமியோக்களும் தியேட்டர் கொண்டாடும் மொமன்ட்களாக மாறியிருக்கின்றன.
அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளை அத்தனை கோணங்களிலும் கச்சிதமாகப் படம்பிடித்து மிரட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கு சபாஷ்! பரபர முதற்பாதி, ஆக்ஷன், யூனிவர்ஸ் கட்டமைப்பு என நிதானமான இரண்டாம் பாதி என தன் கத்தரியில் படத்தைப் பளிச்சிடச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ. படம் நகர்ந்து கொண்டிருக்கையில் தனியாகக் கவனம் ஈர்க்கும் டிரான்சிஷன் நுட்பமும் குட் ஒன் பாஸ்! இசையில் சூப்பர் பவர் கொண்டு படத்தின் உயிர்நாடியாகத் தாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். மாஸ் காட்சிகளுக்கு இவருடைய மிரட்டலான பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் பெரும்பகுதி ஆக்ஷனில் விரியும் பொறுப்பை உணர்ந்து ஸ்டன்ட் குழு சண்டைக் காட்சிகளை நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறது. மல்லுவுட்டில் கட்டமைக்கப்படும் முதல் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸ் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்குத் தனிக் கவனத்தைக் கொடுத்து உழைத்திருப்பது நல்லதொரு விஷுவல் அனுபவத்தையும் தருகிறது.
காமெடி, அமானுஷ்ய காட்சிகளை வைத்து பில்டப் ஏற்றுவது என முதற்பாதி, விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பரபரவென நகர்கிறது. சூப்பர் பவருக்குப் பின்னிருக்கும் காரணங்களைச் சொன்ன விதம், அதனை விளக்க எடுத்துக்கொண்ட ப்ளாஷ்பேக் கால அளவு என இயக்குநர் டாமினிக் அருண் நுணுக்கமான பணிகளைச் செவ்வனே செய்திருக்கிறார்.
'சந்திரா யார்' எனத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பார்வையாளர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்று, 'என்னது நாகர்ஜூனாவா?' என நம்மைத் திகைப்புக்கு உள்ளாக்கி வெளிப்படுத்திய தருணம் அடிப்பொலி!
சூப்பர் ஹீரோக்களுக்கான பில்டப், இரண்டாம் பாதியில் நடக்கும் விஷயத்திற்கு முதல் பாதியிலே சின்னதாகத் துப்பு கொடுத்திருப்பது எனத் திரைக்கதையில் நுட்பமான பணியை மேற்கொண்டிருக்கிறது டாமினிக் அருண் - சாந்தி பாலச்சந்திரன் கூட்டணி!

ஆனால், கல்யாணி ப்ரியதர்ஷனுக்கும், இந்த கதைக்கும் முக்கிய வில்லன் யார், தொடக்கத்தில் கல்யாணி எங்கிருந்து வருகிறார், என்ன பொருளை எடுத்து வந்தார், கல்யாணி இருக்கும் குழுவின் முக்கிய நோக்கம் என்ன... என்பது போன்ற கேள்விகளுக்கு 'அடுத்த பாகத்தில் பதில் சொல்றோம்' என அசால்ட்டாக நழுவியிருக்கிறார்கள். இதுபோக, சூப்பர்ஹீரோ, யுனிவர்ஸ் கட்டமைக்கப்பட்ட விதம், ஃபேண்டஸி விஷயங்கள் என எல்லாவற்றிலும் ஹெவியாக மேற்கத்தியப் பாணி வாடை வீசுவதும் நெருடலே!
இதனைத் தொடர்ந்து வரும் இரண்டாம் பாதியையும் க்ளிஷே கலவரத்திற்குள் புகுத்தி சூப்பர் ஹீரோவைச் சற்றே சோம்பேறியாக்கியிருக்கிறார் இயக்குநர். இதுவே, படத்தின் வேகத்திற்குச் சோதனையாக மாறியிருக்கிறது.
எழுத்தில் சூப்பர் ஹீரோக்கள் சற்றே நார்மல் மோடுக்குச் சென்றாலும் மேக்கிங், கதையின் ஐடியா என ஜொலிக்கும் இந்த `லோகா' மல்லுவுட்டில் ஒரு யூனிவர்ஸை கட்டமைப்பதற்கு நல்லதொரு ஆரம்பப் புள்ளி!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...