Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ஓணம் ட்ரீட் எப்படி?
எர்ணாகுளத்தில் உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பாலகிருஷ்ணனுக்கு (மோகன்லால்) இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாகிறது. விபத்தில் உயிரிழந்த புனேவைச் சேர்ந்த மலையாளியும், ராணுவ கர்னலுமான ரவீந்திரனின் இதயம், சந்தீப்பிற்குப் பொருத்தப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகுத் தன் அன்றாடங்களுக்குத் திரும்பும் சந்தீப்பைப் பார்க்க, ரவீந்திரனின் மகள் ஹரிதா (மாளவிகா மோகனன்) வருகிறார். அடுத்த வாரம் நடக்கவுள்ள தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு சந்தீப்பை அழைக்கிறார் ஹரிதா. அதற்காகத் தனது மருத்துவ உதவியாளர் ஜெர்ரியுடன் (சங்கீத் பிரதாப்) புனே செல்கிறார் சந்தீப். அங்கு ரவீந்திரனின் மனைவி தேவிகாவையும் (சங்கீதா), ரவீந்திரனின் நண்பர்களையும் சந்திக்கிறார். அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளால் சந்தீப், ஹரித்தா, தேவிகா ஆகியோர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள `ஹ்ருதயபூர்வம்' மலையாளப் படத்தின் கதை.

படம் முழுவதும் தன் கதாபாத்திரத்தில் இழையோடும் குறும்பு, நையாண்டி, சிரிப்பு போன்றவற்றுடன் சின்ன சின்ன சேட்டைகளைத் தன் அனாயாசமான உடல்மொழியால் கடத்தியிருக்கிறார் மோகன்லால். ஆங்காங்கே தலைதூக்கும் சின்ன சின்ன எமோஷன்களையும் தன் அனுபவத்தால் அழுத்தமாக்கியிருக்கிறார். உடல் கோளாறுகள் தரும் அசௌகரியத்தை எல்லா காட்சிகளிலும் கடத்தி, கதாபாத்திரத்தின் இயல்பை இறுதிவரை பிடித்து நிற்கிறார். அடிப்பொலி லால் ஏட்டா! தந்தை மீதான அதீத பாசத்தோடு, கண்டிப்பான பேர்வழியாகவும் தன் கதாபாத்திரத்தைக் கரைசேர்த்திருக்கிறார் மாளவிகா மோகனன். படம் முழுவதும் வந்து, கிடைக்கும் தருணங்களிலெல்லாம் தன் ஒன்லைன் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார் சங்கீத் பிரதாப். மோகன்லாலுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசம்! தன் நிதானமான நடிப்பால் இரண்டாம் பாதிக்கு வலுசேர்க்கிறார் சங்கீதா. சித்திக், லாலு அலெக்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
எர்ணாகுளம், புனே நகரம், மலைப் பிரதேசம் எனப் பயணிக்கும் படத்திற்கு, ஆர்ப்பாட்டமில்லாத, நிதானமான திரையனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனு மூதேடாத். இந்த ஃபீல்குட் திரையோட்டத்தின் எமோஷனையும், காமெடியையும் சிதறவிடாமல் கோர்க்க மிதமான வேகத்தைக் கடைப்பிடித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ஒரு பாடலைத் தவிர மற்றவை கதையோடு இயைந்து வருவது ப்ளஸ்! தன் அழகான பின்னணி இசையால், உணர்வுகளையும் நகைச்சுவை தருணங்களையும் கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் ஜஸ்டின்!

ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு புதுமையான சம்பவமும், அதனால் கிடைக்கும் ஆழமான அனுபவமும் அவனின் வாழ்க்கையை எப்படிச் செறிவூட்டுகிறது என்பதைத் தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சத்யன் அந்திக்காடு.
காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், புனே பயணத்திற்குப் பிறகே பிரதான கதைக்குள் வருகிறது திரைக்கதை. காமெடி, மிதமான எமோஷன், சின்ன திருப்பம் என்ற மீட்டரிலேயே இறுதிக்காட்சி வரை பயணிக்கிறது படம். இதற்கு அகில் சத்யனின் கதையும், சோனு டி.பி-யின் திரைக்கதையும் கைகொடுத்திருக்கிறது. மோகன்லால் - சங்கீத் பிரதாப் காம்போவின் சேட்டைகளோடு, பகத் பாசில் ரெஃபரன்ஸ், மோகன்லாலின் தசரதம் படக் காட்சி ரெஃபரன்ஸ் போன்றவையும் க்ளிக் ஆக, இடைவேளைவரை கலகலப்பிற்கு உத்தரவாதம் தருகிறது திரைக்கதை.

இடைவேளையின் போது வரும் சென்சிபிளான திருப்பத்தையும் வெறும் காமெடியாக மட்டும் அணுகாமல், பொறுப்போடு அணுகி, அதற்குச் சரியான முடிவையும் கொடுத்திருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை. அதேநேரம், யூகிக்கும்படியான திருப்பங்களோடு, யூகிக்கும்படியான ஃபீல் குட் பாதையில் திரைக்கதை போவதும், வலுக்கட்டாயமான ஆக்ஷன் காட்சிகள் எட்டிப் பார்ப்பதும் ஆங்காங்கே சோர்வைத் தருகின்றன. இறுதிக்காட்சிக்கு முந்தைய எமோஷன் காட்சியில் தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளையும் பேசும் தருணத்தில், மோகன்லாலின் நடிப்பு அட்டகாசம்! சில கௌரவத் தோற்றங்கள் சர்ப்ரைஸ் தருகின்றன.
எளிமையான கதை, ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, இயல்பான கதாபாத்திரங்கள் என அனைத்து வண்ணங்களும் கைகூட, ஓணம் பூக்கோலமாக நம் இதயத்தை நிறைக்கிறது இந்த `ஹ்ருதயபூர்வம்'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...