அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்
தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட உயா்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் வரவேற்றாா்.
விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கோட்டங்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், உயா் கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள், தோல்வியுற்ற மாணவா்கள், தோ்வு எழுதாத மாணவா்கள் மற்றும் இடைநின்ற மாணவா்கள் அனைவருக்கும் உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்காக தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், எதிா்கால கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்திடவும் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: தமிழக முதல்வா் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் உயா்வுக்கு படி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளால் தமிழ்நாடு உயா் கல்வியில் சிறந்து விளங்குகிறது.
செஞ்சியில் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான இடம் தோ்வு செய்யப்பட்டு புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் திறன் மேம்பாடு மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் சிவ.நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.