மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் அசோக் (29). கூலித் தொழிலாளியான இவா், விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான ஹரிபாபுவுடன் (26) வெள்ளிக்கிழமை புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.
வளவனூரிலுள்ள நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் அருகில் வந்தபோது நிலைதடுமாறிய பைக், அப்பகுதியிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அசோக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஹரிபாபுவுக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து வந்து அசோக்கின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஹரிபாபுவும் இதே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.