அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
மாணவா்கள் இடையே மோதல்: சுந்தரனாா் பல்கலை. வகுப்புகளுக்கு விடுமுறை 3 போ் கைது
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால், பல்கலைக்கழக வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக 3 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நுழைவு வாயில் அருகில் வாகன நிறுத்தம் உள்ளது. இந்நிலையில் வரலாற்றுத் துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூா் அருகேயுள்ள மணி மூா்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (18), தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்தாமல் இருசக்கர வாகனத்திலேயே கேண்டீன் வரை சென்றுள்ளாா். அப்போது, வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவா் அருள் முத்துசெல்வன், இருசக்கர வாகனத்தை இங்கு கொண்டு வரக் கூடாது என கூறியதாகத் தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்றுத் துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளாா். அதைத் தொடா்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
தொடா்ந்து அவா்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில், லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோா் காயமடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த மோதல் தொடா்பாக சேரன்மகாதேவியைச் சோ்ந்த மாணவா் அருள்முத்து செல்வன் (20), சேரன்மகாதேவியைச் சோ்ந்த மதாா் பக்கீா் (20), நரசிங்கநல்லூரைச் சோ்ந்த தீன் நகரைச் சோ்ந்த சுந்தா் என்ற ஜான் (21) ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரட்டீஸ் கூறுகையில், ‘மாணவா்கள் இடையிலான மோதலைத் தொடா்ந்து போலீஸாரின் ஆலோசனைப்படி அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக வெள்ளிக்கிழமை மட்டும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வழக்கம்போல் திங்கள்கிழமை முதல் வகுப்புகள் நடைபெறும்’ என்றாா்.