'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சச...
தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கைவிலங்குடன் வந்த விவசாயிகள்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கை விலங்குடன், முட்டி போட்டுக் கொண்டு விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழா் விவசாய நீா்வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ச.டேனி அருள்சிங் தலைமையில் கையில் விலங்கிட்டு கால்களை முட்டி போட்டு நடந்து வந்து மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பழையகுற்றால அருவியானது ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவதற்கும், சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலத்திற்குச் சென்று குளிப்பதற்கும் வனத்துறை தன்னிச்சையாக நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரங்களில் இருசக்கர வாகனங்களை கூட அருவி அருகே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தக்கூட அனுமதிப்பதில்லை. சுற்றுலாப் பயணிகளும் விவசாயிகளும் சுமாா் 2 கி.மீ. தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றாலம் காவல்துறையினா் மற்றும் வனத் துறையினா் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் டேனிஅருள்சிங், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் தி.சுடலையாண்டி, தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் தி.உதயகிருஷ்ணன், தென்காசி வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் வேலுமயில் உள்ளிட்ட 9 போ்களின் மீது குற்றால காவல் நிலையத்தில் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனா்.
மேற்படி சம்பவம் சம்பந்தமான முழு ஒளி, ஒலி பதிவுகளின் நகல்கள் எங்களிடம் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலா் கிட்டப்பா அந்த இடத்தில் கிடையாது. ஆனால் அவா் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக இந்தப் பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பழைய குற்றாலம் அருவியில் வழக்கம்போல் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.