'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில்
SSA ( Sarva Shiksha Abhiyan) திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில், மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து, நேற்று (ஆகஸ்ட்29) உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய போது, சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, " மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது.
அதில் முக்கியமாக, கல்வி வளர்ச்சியில் மாணவர்களைப் பாஜக அரசு மிகவும் வஞ்சித்து வருகிறது.
மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களை தொடர்ந்து புறக்கணித்து நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது.
அதற்கு தமிழ்நாட்டில் மறுப்பு தெரிவிப்பதால், நவயோதயா பள்ளி என்ற பெயரை மாற்றம் செய்து வேறு ஒரு பெயரில் அப்பள்ளியை தமிழகத்துக்கு கொண்டு வர வலியுறுத்தி கையெழுத்து போட வற்புறுத்துகிறார்கள்.

அவ்வாறு செய்ய மறுப்பதால், மத்திய அரசு தமிழகத்தை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறது.
இதுகுறித்து நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், உடனடியாக மாணவர்களுக்கு கல்வி தொகையை விடுவிக்க வலியுறுத்தியும் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.
இதற்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.