கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!
கொச்சியில் உள்ள ஒரு வங்கியின் உணவு விடுதியில் மாட்டிறைச்சி சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என வங்கி மேலாளர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கியின் வட்டார மேலாளராக பிகாரைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் பொறுப்பேற்றார். இவர் வங்கி ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கியின் உணவு விடுதியில் மாட்டிறைச்சியை சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என உத்தரவிட்டார்.
வங்கி மேலாளரின் உத்தரவுக்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் (Bank Employees Federation of India) சார்பாக போராட்டமும் நடத்தப்பட்டது.
முதலில், வங்கி ஊழியர்களுக்கு மேலாளர் கொடுத்த பணி நெருக்கடிக்கு எதிராகத்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பின்னர், மாட்டிறைச்சிக்கு தடை விதித்த காரணத்தால், பீஃப் திருவிழா என்ற பெயரில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிடும் நூதனப் போராட்டத்தை போராட்டக் குழுவினர் மேற்கொண்டனர்.
மேலாளரின் அலுவலகத்துக்கு முன்பாக திரண்ட போராட்டக் குழுவினர், பரோட்டாவுடன் மாட்டிறைச்சி சேர்த்து சாப்பிட்டு, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மாட்டிறைச்சி தடைக்கு எதிரான வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வங்கி கூட்டமைப்பு கூறுகையில்,
இங்குள்ள சிறிய விடுதியில் வாரத்தில் சில நாள்களில் மட்டுமே மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுகிறது. ஆனால், புதிய மேலாளர் அதற்கும் தடை விதித்தார்.
உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில் அவரவர் விருப்பமுள்ள உணவைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். நாங்கள் யாரையும் அதனை சாப்பிட வற்புறுத்தவில்லை. இந்த மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாட்டுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க:அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!