சத்தீஸ்கரில் ஆசிரியரைக் கடத்தி கொன்ற நக்சல்கள்!
சத்தீஸ்கரில், அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நக்சல்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பிஜப்பூர் மாவட்டத்தில், டோட்கா கிராமத்தைச் சேர்ந்த கல்லு டட்டி (வயது 25) எனும் இளைஞர், லெந்திரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.29) மாலை, பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்றபோது அவரை நக்சல்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட கல்லு டட்டியை, நக்சல்கள் கூர்மையான ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்து, அவரது சடலத்தை கிராமத்தின் அருகில் வீசி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவலறிந்து இன்று (ஆக.30) அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அவரது உடலைக் கைப்பற்றி, கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வரும் சூழலில், காவல் துறைக்கு தகவல் அளிக்கும் உளவாளி எனும் சந்தேகத்தில் நக்சல்கள் அவரைக் கொன்றதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பஸ்தார் பகுதியில் சிக்ஷாடூட்ஸ் எனப்படும் தற்காலிக ஆசிரியர்களை நக்சல்கள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர். கடந்த 2023 ஜூன் மாதம் முதல், 8 தற்காலிக ஆசிரியர்கள் நக்சல்களால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!