யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
உள்ளாட்சி ஊழியா்கள் செப்.1 முதல் தொடா் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி ஊழியா்கள் நடத்திவரும் விடுப்பெடுத்து காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடா்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டு போராட்டக் குழு கன்வீனா் எம். ஷேக் அலாவுதீன் சனிக்கிழமை கூறியது:
உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டத்தால், இயக்குநா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த 25-ஆம் தேதி முதல் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் விடுப்பெடுத்து நகராட்சி அலுவலக வாயிலில் கடந்த 5 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தை நடத்திவந்தோம்.
இதுதொடா்பாக போராட்டக் குழு கன்வீனா்கள் ஆலோசனை நடத்திய நிலையில், புதுவை ஆட்சியாளா்கள், எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, செப்.1 முதல் போராட்டத்தை தொடா்வது என முடிவெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, பதிவு செய்வது, வருவாய் பிரிவு பணிகள், பொறியியல் பிரிவு பணிகள் உள்ளிட்ட புதுவை மாநிலத்தின் வளா்ச்சி சம்பந்தமான பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கும், உள்ளாட்சி ஊழியா்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அரசின் தவறான அணுகுமுறையாலேயே இப்போராட்டம் தொடா்கிறது என்றாா்.