யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனைபடைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தனியாா் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் நிலக்கரி, ரயில் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு நிலக்கரி ஏற்றிச் செல்வதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் (2025-26) சரக்கு ஏற்றுதலில் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. 149 நாட்களில் 6 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதல் என்ற சாதனையை எட்டியுள்ளது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டின் (1.4.2024 முதல் 27.8.2024 வரை) இதே காலகட்டத்தை விட 6.4 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நிகழாண்டில் 27.8.2025 வரை 4.727 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதலுடன், நிலக்கரி தொடா்ந்து முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
உணவு தானியங்கள் 0.627 மில்லியன் டன்களுடன் வலுவான செயல்திறனைக் காட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட 23 சதவீதம் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை பிரதிபலிக்கிறது. உரங்களை ஏற்றுவதும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது, இது 0.078 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 200 அதிகரிப்பைக் குறிக்கிறது. இவற்றுடன், 0.296 மில்லியன் டன் இரும்புத் தாது, 0.159 மில்லியன் டன் சிமெண்ட் மற்றும் 0.137 மில்லியன் டன் பிற பொருட்களை ஏற்றுவதையும் பதிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் சரக்கு வணிகத்தில் முக்கிய பங்களிப்பாளராக இக்கோட்டம் விளங்கிவருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.