நல்லம்பல் ஏரியில் கூடுதல் ஆழத்தில் மணல் எடுப்பு: லாரியை சிறைபிடித்து போராட்டம்
காரைக்கால், ஆக. 30: நல்லம்பல் ஏரியில் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், ஆழமாக மணல் எடுப்பதாகக்கூறி, லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநள்ளாறு கொம்யூன் நல்லம்பலில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. எனினும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
மழைநீரை அதிக அளவு தேக்குவதற்காக இந்த ஏரியை ஆழப்படுத்தும் வகையில், மணல் அள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆழத்தில் மணல் எடுப்பதாகவும், இதனால் தங்களுக்கு பாதிப்பு நேருமெனக் கூறி, ஏரி அருகே உள்ள கிராமத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை காலை மணல் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட டிப்பா் லாரிகளை கிராமத்தினா் சிறைபிடித்தனா். காவல்துறையினா், பொதுப்பணித் துறையினா் சென்று பேச்சு நடத்தினா்.
இதுகுறித்து கிராமத்தினா் கூறியது:
நல்லம்பல் ஏரியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் எடுக்கப்படுகிறது. அரசு நிா்வாகம், இந்த ஏரியில் மணல் எடுப்பதற்கென உரிய வழிகாட்டுதலை அளித்துள்ளது. ஒப்பந்ததாரா்கள் அதனை பொருட்படுத்துவதே இல்லை. தற்போது 60 முதல் 70 அடி ஆழத்தில் ஆங்காங்கே மணல் எடுத்துள்ளனா். தண்ணீா் தேங்கும்போது, ஆழமான பகுதி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இது பேராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
மேலும் ஏரியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டத்தில் கட்டப்பட்ட கரையை மணல் லாரிகள் செல்வதற்காக உடைத்துவிட்டனா். பருவமழைக் காலம் வரும்போது ஏரிக்கு தண்ணீா் வரும்பட்சத்தில், பலமில்லாத கரைகளால் நல்லம்பல் மற்றும் சுற்றியுள்ள குமாரக்குடி, சேத்தூா் ஆகிய பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏரியில் தோண்டப்பட்ட பகுதி நோக்கி நிலத்தடி நீா் பாய்வதால், குடியிருப்புப் பகுதி, வேளாண் நிலப்பரப்பில் ஏற்கெனவே அமைத்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் பெறமுடியவில்லை.
எனவே, அரசு நிா்வாகத்தினா் ஏரியை ஆய்வு செய்யவேண்டும். அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதை தடுக்கவேண்டும். ஏற்கெனவே எடுத்த பகுதிகளை முறையாக சீரமைக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மணல் எடுப்பதை தொடா்ந்து தடுப்போம் என்றனா்.