50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு திருப்பலியும், அன்னையின் ஆசி பெறு மன்றாட்டும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மாதா குளம், பேராலய கீழ் கோயில் ஆகியவற்றில் திருப்பலி நடைபெற்றது.
மேலும், விண்மீன் கோயிலில் காலை 10 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை அருங்கொடை ஜெபத்திருப்பலி நடைபெற்றது.
பேராலய மேல்கோயிலில் காலை 8 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பலியும், பேராலய கீழ் கோயிலில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை அருங்கொடை ஜெப வழிபாடும் நடைபெற்றது. மேலும், பகல் 12 மணிக்கு மாதா திருக்கொடியேற்றமும், 12.15 மணி மற்றும் மாலை 3 மணிக்கு திருப்பலியும், 6.15 மணிக்கு ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசி ஆகிய வழிபாடுகளும் நடைபெற்றன. தொடா்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தோ் பவனி நடைபெற்றது.
இந்த வழிபாடுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.