சீனாவில் ட்ரோன் விளக்குகளால் வரவேற்கப்பட்டாரா மோடி? உண்மை என்ன?
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரோன் விளக்குகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படங்கள் குறித்து உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவை, பாஜகவினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பகிரப்படுவதாகவும், மார்ச் மாதம் சீனாவில் நடந்த ட்ரோன் வண்ண விளக்கு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்து பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்று (ஆக. 31) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தா.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சீன பயணத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் பொருட்டு சீனா, சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கூறி சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி, சீனாவுக்குச் சென்ற சனிக்கிழமை இரவு, ட்ரோன் விளக்குகளால் அவரின் புகைப்படத்தை வானில் உருவாக்கி வரவேற்றதைப்போன்று படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், இவை அனைத்தும் பாஜக தொழில்நுட்பப் பிரிவு அணியால், சித்திரிக்கப்பட்ட படங்கள் என பத்திரிகையாளர் முகமது ஜூபைர் குற்றம் சாட்டியுள்ளார்.
BJP IT cell and RW trolls are sharing edited images from China. pic.twitter.com/YUq8CGsrj0
— Mohammed Zubair (@zoo_bear) August 30, 2025
சீனாவின் செய்தித்தாள் நிறுவனமான பீபள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள படங்கள்தான் உண்மையானவை எனப் பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.
தென்மேற்கு சீனாவில் சோங்கிங் பகுதியில் ட்ரோன் வண்ண விளக்குகளால் 15 நிமிடங்களுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடப்பாண்டு மார்ச் மாத இரவில் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் வண்ண விளக்கு நிகழ்ச்சியில், சீனாவின் பாரம்பரிய சின்னங்கள் வானில் தோற்றுவிக்கப்பட்டன.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், சில வேலைபாடுகளைச் செய்து, பிரதமர் மோடியை சீனா வரவேற்பதைப் போன்று புகைப்படம் உருவாக்கி பகிரப்பட்டுள்ளது.
உண்மை புகைப்படம் மற்றும் பாஜகவினரால் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தை ஒருசேரப் பகிர்ந்து காங்கிரஸ் இதனை விமர்சித்து வருகிறது.
இதையும் படிக்க |டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!