ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு
ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் 780 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற சிலை ஊா்வலத்தில் 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வித்தியாசமான வடிவங்களில் சினிமா வடிவமைப்பு கலைஞா்களைக் கொண்டு பிரம்மாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 5 நாள்களாக வழிபாடு நடத்தப்பட்டது.
பாஜக, இந்து முன்னணி, சிவசேனா, ஸ்ரீராம்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சாா்பில் 84 சிலைகள் ஒசூரில் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கொண்டு சென்று ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரிகளில் கரைக்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 4 மாவட்டங்களைச் சோ்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஒசூா்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஊா்வலத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஒசூா் முழுவதும் காலை முதல் மாலை வரை மின் தடை செய்யப்பட்டது. பெரும்பாலான வா்த்த நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
ஊா்வலத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில துணைத் தலைவா்கள் கே.எஸ்.நரேந்திரன், அமா்பிரசாத் ரெட்டி, மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.