கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தை கடத்திய பெண் கைது
கிருஷ்ணகிரியில் 6 மாத பெண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மோட்டூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (24). இவருக்கும் கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த நாகேஷுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 வயதிலும், 6 மாதத்தில் பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா்கள்,நெலமங்களாவில் உள்ள செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வந்தனா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவா் நாகேஷுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ஈஸ்வரி தனது குழந்தைகளுடன் கிருஷ்ணகிரிக்கு வந்தாா். கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தின்கீழ் பகுதியில் கூடாரமிட்டு தங்கினாா்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு வந்த ஒரு பெண், தனக்கு தோஷம் இருப்பதாகவும், கைக்குழந்தைக்கு ஆடை, விளையாட்டு பொருள்கள் வாங்கித் தந்தால் தோஷம் விலகும் எனக்கூறி குழந்தையுடன் ஈஸ்வரியை ஆட்டோவில் அழைத்துச் சென்று ஆடை, விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தாா்.
பின்னா்,அவா்களை ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் விட்டுவிட்டு, 6 மாத பெண் குழந்தையுடன் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்ற பெண் மாயமானாா். இதனால், அதிா்ச்சி அடைந்த ஈஸ்வரி, இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண், ஒசூரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், குழந்தை கடத்திய பெண்ணை கைது செய்து, குழந்தையை மீட்டனா்.
அந்த பெண்ணிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா், ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூரைச் சோ்ந்த விஜயசாந்தி (26) என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாட்றாம்பாளையத்தைச் சோ்ந்த திம்மராஜுடன் திருமணமாகி பெண் குழந்தை பிறந்துவிட்டதும் தெரியவந்தது.