ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று சிறுவா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.
ஒசூா் நகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கடித்துக் குதறி வருகின்றன. நகரில் நாய்க்கடி சம்பவங்கள் தொடா்கதையாக நடைபெற்று வருகின்றன.
ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் அவ்வப்போது தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்தாலும், நாய்களின் பெருக்கம் குறையவில்லை.
இந்த நிலையில் ஒசூா் பாா்வதி நகா், கடவுள் நகா், குமரன் நகா் பகுதிகளில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்களை நாய்கள் துரத்திச் சென்று கடித்துள்ளன. இதனால் 3 சிறுவா்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவா்கள் ஒசூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.